简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

அத்தியாயம் 5 – மின்னேரியா தேசிய பூங்கா

Content Image

வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான அனுபவமொன்று

நான் மின்னேரிய தேசிய பூங்காவில் சேவையாற்றும் காலத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. என்னுடைய வல்கமுவ அலுவலகத்திற்குக் காயமடைந்து யானயொன்று பற்றித் தகவலொன்று கிடைத்தது.  நான், கெமுனு, ஜீவக என்னும் என்னுடைய உதவியாளர்கள் இருவருடன் யனைக்கு மருந்து இடுவதற்குச் சென்றோம்.  மின்னேரியக் குளத்தின் அணைக்கட்டிற்கு அருகில் எமக்குச் செல்ல வேண்டியிருந்து.

மின்னேரிய குளத்தின் அணைக்கட்டு அண்மையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டிருந்தது. அங்கு ஆயிரக்கணக்கில் மரங்கள் நீருக்கு அடியில் அகப்பட்டிருந்தன. ​கோடை காலத்திலற்கு நீர் கீழ் மட்டத்திற்கு சென்றால் இம்மரங்கள் நன்றாகத் தெரிகின்றன. இம்மரங்கள் மீனை இரையாகக் கொள்ளும் பறவைகளுக்கு அடைந்திருப்பதற்கும், கூடு கட்டுவதற்கும் சிறந்த இடமாகும். இன்னும் கொஞ்சம் நீர் மட்டம் குறையும் போது இப்பிரதேசம் புல் வெளிகள் ஆகின்றன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் இறந்த மரங்கள் நிறைந்து காணப்படும் புல் வெளிகள் பறவைகளுக்கு போன்றே யானைகளுக்கு புல் மேய்வதற்கான சிறந்த ஒரு தளமாகும்.

அன்று நாம் செல்லும் போது யானைகள் கூட்டம் கூட்டமாக அப்பிதேசத்தில் இருப்பதை கண்டோம். பிதேசம் முழுவதும் வாகனத்​தில் போய் தெடியதன் பின்னர் குளத்தின் ஓரமொன்றில் இருந்த அப்பெரிய யானையை நாம் கண்டோம். எமக்குக் கிடைத்த தகவல்களின் படியும், யானையின் பருமனின்படியும் நாம் ​தேடும் யானை என எமக்கு விளங்கிற்று. இன்னும் கொஞ்சம் அருகில் செல்லும் போது, யானை அதன் வயிற்றில் ஒரு புறத்தில் இருக்கும் காயமொன்றிற்கு சேற்றை அடித்துக் கொள்தை நாம் கண்டோம் அது ஒரு பெரிய காயம். எவ்வாறு இக்காயம் ஏற்பட்டது என்பதனை நினைத்துப் பார்க்கவே கடினமாக இருந்தது. காயம் அழுகி ஈக்கள் மொய்த்த வண்ணமிருந்தன. அக்காயத்திற்கு மேலதிகமாக யானையின் இடது முன் காலின் முழங்காலுக்கு மேல் துப்பாக்கிச் சூடொன்றின் காயமொன்றும் இருப்பதாகத் தென்பட்டது. வயிற்றுப் புண் அளவு கொடியதாக இல்லா விட்டாலும் இக்காயம் அழுகியிருந்தது. இந்த யானையின் ஒரு கண் குருடாகவும் இருந்ததுடன், யானை மிகவும் வேதனையுடன் இருப்பதனையும் விளங்கிக் கொள்ள முடிந்தது.

யானையை நினைவிழக்கச் செய்து மருந்து செய்ய வேண்டும் என நான் தீர்மானித்தேன்.  நினைவிழக்கச் செய்யும் பொருட்களைத் தயாரிப்பதற்கான நாம் சிறிது தூரம் சென்றோம். இந்நேரத்தில் யானை தண்ணீரிலிருந்து ஓரமாகி புட்தரைப் பகுதிக்கு வந்திருந்தது. யானயைப் புட்தரையில் நினைவிழக்கச் செய்து அங்கு படுக்க வைத்துக் கொள்வதுதான் எமக்குத் தேவையாக இருந்தது. எனினும் யானை குளத்திற்கு அருகில் நீர் காணப்படும் ஓரத்தில் இருந்ததனால் வாகனத்தில் சென்று நினைவிழக்கச் செய்வது கடினம். அவ்விடத்திற்கு நடந்து சென்று மருந்து செய்வதும் ஆபத்தானது.

அதனால் யானையின் குருடான கண்ணைப் பிரயோசனப்படுத்திக் கொள்ள நான் நினைத்தேன். வாகனத்திலிருந்து இறங்கி நினைவிழக்கச் செய்யும் மருந்தைச் செலுத்துவதற்கு மெது மெதுவாக யானைக்கு அருகில் அதன்  குருடான கண் இருக்கும் பக்கத்தால் சென்றோம். எனக்குப் பின்னால் துப்பாக்கியொன்றையும் எடுத்துக் கொண்டு ஜீவக வந்தார்.

ஐம்பது யார் அளவு தூரத்திலிருந்து நான் சரியாக இலக்கு வைத்து யானைக்கு மருந்தை ஏற்றினேன். கிளர்ந்தெழுந்த யானை நாம் இருந்த பக்கத்திற்குத் திரும்பினாலும் நாம் கீழே படுத்திருந்ததனால் எம்மைக் காணவில்லை.

ஆபத்தென்று விளங்கி விட்டது போலும். யானை காட்டுப் பகுதிக்கு ஓடியது. நாம் வாகனத்திற்கு ஓடிச் சென்று யானை ஓடுவதனைத் தடுப்பதற்காக வாகனத்தைச் செலுத்தினோம். எமது முயற்சி தோல்வியுற்றது. யானை, காட்டிற்கு ஓடுகின்ற ஏனைய யானைகளுடன் இணைந்து கொண்டது. நாம் மிகவும் ஆபத்தான ஒரு நிலைமைக்கு விழுந்து விட்டோம்.

அப்பக்கம் சிறிது அடர்ந்த காடாகும். எல்லாப் பக்கத்தாலும் யானைகளின் பயணப் பாதையாக இருந்தது. அவை ஒன்றன் மேல் ஒன்று விழுந்திருந்தன. ஒரு யானையின் பாத அடையாளத்தின் பின்னாடி செல்வது மிகவும் சிரமமானது.

உபகரணங்களையும் தூக்கியவாறே பயங்கரமான செயலொன்றை நாம் ஆரம்பித்தோம். எமது குழுவில் மூவரே இருந்தனர். மூவர் இக்காரியத்துக்கு எவ்வாறேனும் போதுமானதாக இல்லை. அவ்வாறே எனது உதவியாளர்கள் இருவரும் இதற்கு முன்னர் அனுபவம் பெற்றவர்கள் அல்லர்.

யானைகள் நிறைந்த பிரதேசமொன்றில், தமது பின்னால் துரத்தக் கூடியது என்று தெரிந்திருந்த, குழம்பியிருந்த யானையொன்றைத் தேடிச் செல்வதனால் பாதுகாப்பு முக்கியமாக இருந்தது.​ அதிஷ்டவசமாக காட்டில் சுமார் நூறு மீற்றர் தூரத்திற்குச் செல்லும் போது மருந்து ஏற்றப்பட்ட யானை சென்ற பாதையை எம்மால் அடையாளம் காண முடிந்தது. இழுத்துச் சென்ற அடிச்சுவடுகள் மூலம் அப்பாதையை நாம் ​அடையாளம் கண்டோம். அம்மருந்து செயற்படுவதனைக் காட்டும் விதத்திலான  அடையாளமொன்று தெரிந்தது. நினைவின்றிக் கிடக்கும் யானையொன்றைக் காணும் எதிர்பார்ப்புடன் நாம் முன்னே சென்றோம். யானை விழுந்நிருப்பதனை​ எம்மால் காண முடிந்தது. அதிஷ்டவசமாக மூச்சு விடச் சிரமமின்றி சாதாரணமாகவே விழுந்திருந்தது.

சில காயங்களைச் சுத்தம் செய்து தேவையான சகல விதமான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளையும் மற்றும் துணை மருந்துகளையும் வழங்குவதற்கு எமக்கு முடிந்தது. எனினும் யானையின் வலது புறத்தில் வயிற்றுப் பகுதியில் உள்ள காயத்தை நன்றாகச் சுத்தம் செய்ய முடியவில்லை. ஏனெனில் அந்த யானை காயம் ஏற்பட்டிருந்த பக்கத்திற்கே விழுந்து படுத்திருந்தமையினாலாகும். எவ்வாறாயினும் இம்மருந்து மூலம் புழுக்கள் ஏற்படுவதனைத் தடுத்து யானை அனுபவிக்கும் வேதனையைக் குறைக்கிறது. நினைவின்றிக் கிடந்த யானையின் இரு புறத்திலும் எனது உதவியாளர்கள் இருவரையும் இருத்தி நான் ஒரு புகைப்படத்தை எடுத்தேன். ஏனெனில் அவர்கள் கலந்து கொண்ட யானையொன்றை ​​​நினைவிழக்கச் செய்யும் முதலாவது அனுபவம் இதுவென்பதனாலாகும்.

யானைக்கு மீண்டும் நினைவு திரும்பும் ஊசைச் செலுத்தி பாதுகாப்பான தூரத்தில் நாம் நின்றிருந்தோம்.  ஆனாலும் சிறிய மரக் கிளைத் துண்டொன்றினால் குத்தியும் யானை எழுந்திருக்கவில்லை. அதற்காக நாம் கவலையடைந்தோம். சிறிது நேரத்தின் பின்னர் யானைக்கு மீண்டும் நினைவு திரும்பும் அடையாளம் தென்பட்டது. எமது பாதுகாப்பைக் கருதி நாம் இன்னும் சற்று தூரம் சென்றோம். எனினும் யானை எழுந்து  நிற்கவில்லை. அதன் நெஞ்சுப் பகுதிக்குப் பாரத்தைச் செலுத்திப் படுத்திருந்தது. இவ்வாறு படுத்திருந்த முறையினால் மூச்சு விடுவது தடைப்பட்டு யானையொன்று இறக்கவும் நேரிடலாம். யானையை எழுப்பி நேராக வைத்திருப்பதே எனக்குத் தேவைப்பட்டது.

இவ்வாறான சந்தர்ப்பமொன்றில் ​யானை வெடி ஒன்றைப் பற்ற வைத்து யானையைப் பயமேற்படச் செய்து எழுப்புவதுதான் சாதாரணமாக நடைமுறைப்படுத்தும் முறையாகும். எனினும் இங்கு புற்றரை காணப்பட்டதனால் ஏனைய யானைகள் சஞ்சலப்பட்டு காட்டிற்குள் நுழைந்து விடலாம் என்பதனைக் கருத்திற் கொண்டு யானைவெடி ஒன்றைப் பற்ற வைக்கவும் முடியவில்லை.

தற்போது நேரம் மாலை ஆறாக இருக்கலாம். காட்டிற்குள் இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. சத்தமிட்டுக் கொண்டே, அடிமேல் அடி வைத்து அசைவின்றியிருந்த யானையை நாம் நெருங்கி விட்டோம். அதன் பார்வை எம்மீது இருந்தாலும் எவ்வித மாற்றத்தையும் காண முடியவில்லை.

மீண்டும் நாம்  மரக் கிளைத் துண்டொன்றினை எடுத்து யானையைக் குத்தி அதனைத் தொந்தரவு செய்தோம்.

உடனே ஒரேயடியாக எழும்பிய யானை எமது பக்கத்திற்குத் திரும்பி எம்மை விரட்டத் தொடங்கியது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாம் ஓட்டம் பிடித்தோம். யானையின் தும்பிக்கை எனக்கு மிக அருகில் தெரிந்தது. இது எனது வாழ்வின் இறுதித் தருணம் என என் மனதில் தோன்றியது. மரணப் பீதி காரணமாகக் காட்டினைத் தாண்டியும் ஓட முடிந்தது. புற்றரைக்கு வந்த உடனே எனது கால் சிக்கி கீழே விழுந்து பல முறை உருண்டு சென்றேன். அதிர்ச்சி காரணமாக சில நிமிடங்கள் நான் அவ்வாறே படுத்திருந்தேன்.

காட்டிலிருந்து வெளியே பாய முடியுமாக இருந்ததும், யானை​ திறந்த பகுதிக்கு வர விரும்பாமையும் எமது முற்பிறப்பின் புண்ணியத்தினாலாகும். இன்னும் சில அடிகள் யானை முன்னே வந்தால் நான் இலகுவாக நொறுங்கி சுக்கு நூறாகி விட இடமிருந்தது. எவ்வாறிருந்தும் நாம் பாதுகாப்பானோம்.

பின்னர் ஜீவகவிடம், “யானை விரட்டும் போது சத்தம் வருவதற்குத் துப்பாக்கியை ஏன் பற்ற வைக்கவில்லை” என்று​நான் கேட்டேன். அதற்கு அவர் “முயற்சி செய்தும் துப்பாக்கி​செயற்படவில்லை” என்று கூறினார். பின்னர் பரீட்சித்துப் பார்த்த போது துப்பாக்கியின் கொக்கி மாறியிருந்தது.

சுமார் ஒரு கிழமைக்குப் பின்னர், நாம் மீண்டும் ​மின்னேரிய பூங்காவில் அந்த யனையைக் கண்டோம். யானையின் காயங்கள் நன்றாகச் சுகமடைந்து கொண்டிருந்தன. அதனால் அன்றைய நிகழ்வு வாழ்வில் மரணம் பற்றிய பயங்கர அனுபவமொன்றாக இருந்தாலும் மனதுக்கு மகிழ்சியைத் தந்தது.​​​​

விலங்கு வைத்தியர் விஜித பெரேரா  

விலங்கு வைத்தியரான விஜித பெரேரா அவர்கள் வனஜீவராசிகள் விலங்கு வைத்தியராவார். அவ்வாறே ஆசிய யானைகள் பற்றிய விசேட நிபுணர் ஆவார். பேராதெனிய பல்கலைக்கழகத்தில் விலங்கு வைத்திய விஞ்ஞானம் பற்றிய பட்டதாரியான அவர் தமது முதுமாணிப் பட்டத்தை ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் தலைநகரத்தில் இராஜ விலங்கு வைத்திய பீடத்தில் பெற்றுக் கொண்டார். விலங்கு வைத்தியரான விஜித பெரேரா அவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் ‘டரல்’ வனஜீவராசிகள் பாதுகாப்பு கல்வி நிறுவனத்தில் மற்றும் தன்ஸானினயாவில் ஆபிரிக்க வனஜீவராசிகள் கல்லூரியிலும் பயிற்சி பெற்றுள்ளார். பரிசில்களைப் பெற்றுக் கொண்ட எழுத்தாளரான அவர்கள் ​வனஜீவராசிகள் தொடர்பான அதிகளவான நூல்கள் வெளியிட்டுள்ளார்.

23 வருட காலமாக யானைகள் பாதுகாப்புக்காக சேவை செய்துள்ள விலங்கு ​வைத்தியர் விஜித பெரேரா அவர்கள் தற்போது அநாதை யானைக் குட்டிகளைப் புனர்வாழ்வு அளிக்கும் மத்திய நிலையத்தின்  (எத் அத்துரு செவண) கட்டுப்பாட்டாளராவார். அவ்வாறே அவர் இலங்கையின் தென் பகுதிக்குப் பொறுப்பான பிரதான விலங்கு வைத்தியராவார்.

மின்னேரிய தேசிய பூங்கா

ஆரம்ப காலத்தில், இலங்கை விவசாயத்தில் தன்னிறைவு பெற்றிருந்த இடமாகும். அனுராதபுர இராசதானியின் மத்திய பகுதியில் இருந்து பொலன்னறுவை இராசதானி யுகம் வரை​ இலங்கையில் நீர்த்தேக்கங்களை​ நிர்மாணிக்கும் தொழிநுட்பம் உயர் மட்டத்தில் காணப்பட்டதுடன் நாட்டில் மிகப் பெரிய நீர்த்தேக்கங்கள் பல இக்காலத்தில் அமைக்கப்பட்டன.

மகாசேனன்​ மன்னரினால் நிர்மாணிக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள மின்னேரிய நீர்த்தேக்கத்திற்கு இன்றும் தனித்துவமான இடம் காணப்படுகின்றது.மின்னேரிய  குளம் பொலன்னறுவையில் அமைந்துள்ள பெரிய குளம் என்பதுடன் அது கிறிஸ்து வருடம் 286 இல் மகாசேன  மன்னரினால் மின்னேரிய ஆற்றுக்குக் குறுக்காக அமைக்கப்பட்டது. இந்நீர்த்தேக்கத்தில் நீரேந்துப் பகுதி 249 சதுர கிலோ மீற்றர் அளவு பரப்பிற்கு வியாபித்துள்தோடு அங்கு 13 மீற்றர் அளவு உயரமான அணைக்கட்டு 2 கிலோ மீற்றர் தூரத்திற்குக் காணப்படுகின்றது.

இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பாதகமான மனித நடவடிக்கைகள் காரணமாக அங்கு வாழ்கின்ற விலங்குகளை நீண்ட காலத்திற்குப் பாதுகாக்கும் பொருட்டு வன விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 1938 ஆம் ஆண்டில் இது சரணாலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. எனினும் காடழிப்பு நிறுத்தப்படாமையினால் நீண்ட காலப் பாதுகாப்புக் கருதி இப்பிரதேசம் வன விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டதோடு 1998 ஆம் ஆண்டில் சுற்றுலா நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இத்தேசிய பூங்கா வட மத்திய மாகாணத்தில் பொலன்னறுவை மாவட்டத்தில் ஹிங்குரக்கொட பிரதேச செயலாளர் பிரிவில் 8889411 ஹெக்டயார் அளவு  பிரதேசத்திற்குப் பரந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 60 மீற்றர் முதல் 500 மீற்றர் உயரம் வரை பரந்துள்ள மலைகளினாலும், புதர்க் காடுகள், அடர்ந்த காடுகள் மற்றும் புல்வெளிகளைப் பூங்கா முழுவதும் காண முடிகின்றது. மின்னேரியப் பிரதேசத்தின்வருடாந்த மழைவீழ்ச்சி 1500- 2000 மில்லி மீற்றருக்கு இடையிலும் சாதாரண வெப்பநிலை​​ 20.6 முதல் 34.5 ஸென்டிகிரேடிற்கும் இடையிலானதாகும். வட கிழக்கு பருவ மழை கிடைக்கக்கூடிய இத்தேசிய பூங்காவில் ஏப்ரல் முதல் ஒக்டோபர் வரை கோடை காலம் நிலவுகிறது. இங்கு நிலமானது பிரதானமாக செங்கபில மற்றும் ரோன்மடவும் கொண்ட மண்ணை​​யும் கொண்டது.

மின்னேரிய தேசிய பூங்காவினுள் உள்ள மின்னேரிய நீர்த்தேக்கத்திற்குப் பிரதான நீர் வழங்கல் ஆக இருப்பது யோத கால்வாய் மூலம் பாய்ந்து வருகின்ற மகாவலி நீராகும். படு ஓயா, ஈரிகே ஓயா, தல்கொடே ஓயா, கிரி ஓயா, மடயம்பல ஓயா போன்ற ஏரிகளினால் பாய்ந்து வருகின்ற நீர், மின்னேரிய நீர்த்தேக்கத்தின் நீரேந்துப் பகுதியுடன் இணை​வதுடன் நீர்த்தேக்கத்துடன் மிகவும் சிறிய அளவே இணைகிறது.

இப் பூங்காவிற்கு அண்மையில் உலர்ந்த கலவையுடை​ய பசுமையான காடுகள் இனத்திற்குச் சேர்ந்த காடுகளைக் காண முடிகின்றது. தாவர மற்றும் வாழிட வகைகாகக் கீழ் வளரிகளுடன் கூடிய சிறிய தாவரங்களுடனான மலைகளில் உள்ள காடுகள், நடுநிலைமையாகக் காணப்படும் இரண்டாம் நிலை​க் காடுகள், முட்புதர்க் காடுகள், கை​விடப்பட்ட சேனைப் பயிர்ச் செ​ய்கை நிலங்கள், புல் நிலங்கள் மற்றும் ஈர நிலங்கள் என்பவற்றுடன் வெப்ப மண்டல உலர் கலந்த பசுமையான காடுகளையும் காண முடிகின்றது. மேலும் வன பாதுகாப்புத் திணை​க்களத்தினால் பயிரிடப்படுகின்ற தேக்கு மற்றும் யூகலிப்டஸ் செய்கையும், அம்பகஸ்வெவ மற்றும் கஹடிவெமுல்ல போன்ற பிரதேசங்களில் உள்ளன.

தாவர வகைகளைப் பற்றிக் கவனிக்கும் போது பாலை,  முதிரை, காட்டு நொச்சி, பதுரன்கொலி, சாவண்டலை மரம், வீரை​ போன்ற பல தாவரங்களையும் அதிகமாகக் காணலாம். வரண்ட வலயதடதின் காடுகளில் காணக் கூடிய மூங்கிலிரிசி, காட்டு ஈச்சை, கினியா புல் போன்ற பல்வேறு புல் வகைகளும் கைவிடப்படும் சேனை மற்றும் பற்றைக் காடுகளில் மருக்கரை​, ஆலை வகைகள், நீல எருக்கு போன்ற விசேட இனங்களையும் கண்டு கொள்ள முடிகின்றது.​

தேசிய பூங்காவிலுள்ள தாவரங்களின் இவ்வாறான பல்வகை​மை​யினால் இங்கு வாழும் விலங்குகளுக்கு உணவு, நிழல் மற்றும் பாதுகாப்பு என்பன குறைவின்றிக் கிடைக்கின்றன. கோடை​ காலத்தின் தொடக்கத்துடன் மின்னேரிய நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் விரைவாகக் குறைவடைவதனால் குளத்தினை அண்டியுள்ள கரையில் வளரும் புட்கள், புதர்கள் மற்றும் தாவரங்கள் என்பவற்றினால் சுற்றியுள்ள காட்டிலிருந்து பல்வேறு காட்டு விலங்குகள் தமது உணவு மற்றும் நீரைத் தேடி இங்கு வருகின்றன. கடுமையான வறட்சி அதிகரிப்பதுடன ஓகஸ்ட் – செப்டெம்பர் மாதங்களில் வஸ்கமுவ, மாதுறு ஓயா, சோமாவதிய போன்ற வெவ்வேறான பகுதிகளில் இருந்து வருகின்ற யானைக் கூட்டங்கள் ஏரியைச் சுற்றியிருப்பது மாலையில் கண்டு கொள்ள முடியுமான பொதுவான காட்சியாகும்.

காட்டு யானைகள் ஒரே முறையில் சுமார் 500 யைக் காண முடிகின்ற இவ்வரிய சந்தர்ப்பத்தைக் காண்பதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அதிகமானோர் இங்கு வருகை தருகின்றமை விசேட  அம்சமாகும். கவுடுள்ள மற்றும் வஸ்கமுவ பூங்காக்களுடன் தொடர்புபடும் யானைகளின் நடைபாதையின் ஒரு பகுதியாக மின்னேரிய தேசிய பூங்கா காணப்படுகின்றது.

மின்னேரிய பூங்காவிற்கு அண்மையில் பாலூட்டி இனங்கள் 24 உம், பறவையினங்கள் 160 உம், ஊர்வன வகை​கள் 25 உம், மீனினங்கள் 26 உம், வண்ணத்துப் பூச்சியினங்கள் சுமார் 75 உம் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு வாழ்கின்ற வன விலங்கினங்களாக காட்டு யானைகள், குரங்குகள், செங்குரங்குகள், மரை​கள், புள்ளி மான்கள் போன்ற தாவர உண்ணிகளும், புலிகள் மற்றும் கரடிகள் போன்ற மாமிச உண்ணிகளும் அதிகமாக வாழ்கின்றன.

மின்னேரிய நீர்த்தேக்கம் மற்றும் அதற்கு அண்மையில் உள்ள ஈரநில சூழல் அமைப்பு போன்றே புலம்பெயர் பறவை​களும் நடமாடுவதோடு நீர்க்காகம், சாம்பல் நாரை, மஞ்சல் மூக்கு நாரை​​, பெரிய வெள்ளை நாரை போன்ற உள்நாட்டுப் பறவைகளையும், இலங்கைக்கு உரித்தான காட்டுக்கோழி, இலங்கை தொங்கும் கிளி, பழுப்புத் தலை​ச் சிலம்பன், இலங்கை சாம்பல் இருவாய்ச்சி, கிரிம்ஸன் ப்ரென்டட் குக்குறுவான், செந்தொண்டை​ச் சின்னான் என்பனவற்றையும் கண்டு கொள்ள முடிகின்றது. பூங்காவில் வாழ்கின்ற ஊர்வன வகைகளில் சிவப்பு உதட்டுப் பல்லி, அரணை, சதுப்பு  நில முதலை, மலை​ப் பாம்பு, உடும்பு, நீர் உடும்பு என்பன பிரதானமானவையாகும். வண்ணத்துப் பூச்சியினங்கள் பலவற்றை​யும் இங்கு காணக் கூடியதாய் உள்ளது.

இந்தியன் ரோலர்

மகாசேனன்​ மன்னரினால் நிர்மாணிக்கப்பட்ட பாரியநீர்த்தேக்கங்கள் 16 இல் மிகப் பெரிய நீர்த்தேக்கம் மின்னேரிய நீர்த்தேக்கம் என்பதோடு மகாசேன மன்னர் இறந்து அவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தேவாலயமொன்று இன்னும் மின்னேரிய வேல்ல இல் காணப்படுவதுடன் மன்னர் மின்னேரிய கடவுளாக இன்றும் போற்றப்படுகிறார்.

ரம்பவில சுற்றுலா விடுதி

மின்னேரிய தேசிய பூங்காவிற்கு வருகை தரும் போது கொழும்பிலிருந்து ஹபரண ஊடாக பொலன்னறுவை வழியில் 182  கிலோ மீற்றர் தூரத்தில் அம்பகஸ்வெவ அமைந்துள்ள பூங்காவின் தலைமை அலுவலகத்தை நெருங்க முடியும்.  பொலன்னறுவையிலிருந்து 36 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள இப்பூங்கா நுழைவாயில் அலுவலகம் மூலம் அனுமதிப் பத்திரம் விநியோகிக்கப்படும். சுற்றுலாப் பயணிகளிக் தங்குமிட வசதிக்காக ரம்பவில சுற்றுலா விடுதி அமைக்கப்பட்டுள்ளதுடன் அதனை ஒதுக்கிக் கொள்வது கொழும்பில் அமை​​​ந்துள்ள வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணகைகளத்தின் பிரதான அலுவலகத்தின் மூலம் நடைபெறுகிறது.

மின்னேரியதொடர்பான விளக்கத்தில் காணப்படும் விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

Sinhala name

Tamil name

English name

Scientific name

අලියා

காட்டு யானைகள்

Asian elephant

Elephas maximus

වදුරා

குரங்குகள்

Purple faced langur

Presbytes senex

රිළවා

செங்குரங்குகள்

Toque Macaque

Macaca sinica

ගෝනා

மரை​கள்

sambar

Cervus unicolor

තිත් මුවා

புள்ளி மான்கள்

Spotted deer

Axis axis ceylonensis

කොටියා

புலிகள்

leopard

Panthera pardus kotiya

 වළසා

கரடிகள்

Sloth bear 

Melursus  ursinus

දියකාවා

நீர்க்காகம்

Little Cormorant

Phalacrocorax niger

කලපු කොකා

சாம்பல் நாரை

Grey heron

Ardea cinerea

ලතු වැකියා

மஞ்சல் மூக்கு நாரை

Painted stork 

Mycteria leucocephala

මහ සුදු පැස්තුඩුවා

பெரிய வெள்ளை நாரை

GreatWhite Pelican

Pelecanus onocrotalus

වළි කුකුළා

காட்டுக்கோழி

Sri lanka junglefowl 

Gallus lafayetill

ගිරා මලිත්තා

இலங்கை தொங்கும் கிளி

Sri Lanka Hanging parrot 

Loriculus beryllinus

ලංකා මුදුන් බොර දෙමලිච්චා

பழுப்புத் தலை​ச் சிலம்பன்

brown-Capped Babler 

Pellorneum fuscocapillum

අළු කෑදැත්තා

இலங்கை சாம்பல் இருவாய்ச்சி

Sri lanka Grey Hornbill

ocyceros  gingalensis

Sinhala name

Tamil name

English name

Scientific name

ඔලුව රතු කොට්ටෝරුවා

கிரிம்ஸன் ப்ரென்டட் குக்குறுவான்

Crimson-Fronted Barbet

Megalaima rubricapilla

හිස කළු කොණ්ඩයා

செந்தொண்டை​ச் சின்னான்

Black- Crested bulbul

Pycnonotus melanicterus

දුම්බොන්නා

இந்தியன் ரோலர்

Indian roller

Coracias benghalensis

තොල විසිතුරු කටුස්සා

சிவப்பு உதட்டுப் பல்லி

Red lipped lizard

Calotes ceylonensis

හිරළුවා

அரணை

Skink

Lankascinicus fallax

හැල කිඹුලන්

சதுப்பு  நில முதலை

Mugger crocodile

Crocodylus palustris

පිඹුරා

மலை​ப் பாம்பு

Python 

Python molurus

තලගොයා

உடும்பு

Land monitor lizard

Varanus bengalensis

කබරගොයා

நீர் உடும்பு

Asian water monitor

Varanus salvator

மின்னேரிய தொடர்பான விளக்கத்தில் காணப்படும் மரங்களின் பெயர்ப் பட்டியல்

 Sinhala Names

Tamil Names

English Names

Botanical Name

පලු

பாலை

 Ceylon Iron wood

Manilkara hexandra 

වීර

வீரை

 Hedge Boxwood

Drypetes sepiaria 

බුරුත

முதிரை

Satin

Chloroxylon swietenia

මිල්ල

காட்டு நொச்சி

Milla

Vitex altissma

කලුමැදිරිය

பதுரன்கொலி

Kalumediriya

Diospyros aquaesita

හල්මිල්ල

சாவண்டலை மரம்

Halmilla

Berriya cordifolia

කටු උණ

மூங்கிலிரிசி

katuUna

Bambusa bambos

වල් ඉඳි

காட்டு ஈச்சை

walindi

Phoenix  zeylanica

පොහොන්

கினியா புல்

Pohon

Panicum maximum

කුකුරුමාන

மருக்கரை

Kukuruman

Randia dumetorum

කැප්පේට්ටිය

ஆலை வகைகள்

Keppttia

Croton sp

වරා

நீல எருக்கு

Wara

Calotropis gigantea

தொகுப்பாளர்மற்றும்  கதைவியாக்கியானம் – தம்மிகாமல்சிங்ஹ, மேலதிக செயலாளர், வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சு

பூங்கா பற்றிய தகவல்களைத் தொகுத்தவர் – ஹஸினி சரத்சந்திர, பிரதம உத்தியோகத்தர், வன பாதுகாப்புத் திணைக்களம்

தமிழ் மொழிபெயர்ப்பு – ஏ.ஆர்.எப். றிப்னா, அபிவிருத்தி  உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு

ஆங்கில மொழிபெயர்ப்பு (ஆவணங்கள்) – அசோக பலிஹவடன, மொழிபெயர்ப்பாளர், வனஜீவராசிகள் மற்றும் வனபாதுகாப்பு அமைச்சு

இணைய வடிவமைப்பு – என்.ஐகயத்ரி, அபிவிருத்தி  உத்தியோகத்தர், வனஜீவராசிகள் மற்றும் வன  பாதுகாப்பு அமைச்சு

படங்கள் – ரோஹித குணவர்தன,மஹேக்ஷா சதுராணி பெரேரா(பட்டதாரி பயிற்சியாளர்), வனஜீவராசிகள்பாதுகாப்புத் திணைக்களம்